தமிழ்நாடு

tamil nadu

மக்கள் கனவு காணும் அரசாக திமுக அரசு இருக்கும்: ஸ்டாலின் உறுதி

திருவண்ணாமலை: பத்தாண்டு கால அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட துன்பத்தைத் துடைப்பது ஒரு பக்கம் என்றால், தொழில்துறை உள்ளிட்ட வளர்ச்சியை உருவாக்கும் பணி மற்றொரு பக்கம் என மக்கள் கனவு காணும் அரசாக, கவலைகளைப் போக்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

By

Published : Jan 29, 2021, 3:11 PM IST

Published : Jan 29, 2021, 3:11 PM IST

Updated : Jan 29, 2021, 4:37 PM IST

af
fa

திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டம் – திருக்கோவிலூர் சாலை – நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கலைஞர் அரங்கில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரைச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார். இந்நிகழ்ச்சியில், அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்று, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

திருவண்ணாமலையில் பொது தொண்டாற்றியவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளர் கே.வி ஜெயஸ்ரீ , இடுகாட்டில் பணியாற்றி வரும் சமூக சேவகர் (தமிழக அரசின் அவ்வையார் விருது பெற்றவர்) கண்ணகி மற்றும் ஸ்வீடன் நாட்டின் சுற்றுச்சூழல் துறை விருது பெற்ற மாணிவி வினிசா உமாசங்கர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், ”நான் நலம், நீங்கள் நலமா? நான் ரெடி, நீங்கள் ரெடியா? உங்கள் எல்லோரையும் பார்ப்பதற்காகவும் – உங்களுடைய குறைகளைக் கேட்பதற்காகவும் தான் இப்போது நான் இங்கே வந்திருக்கிறேன். இப்போது நீங்கள் இங்கு திரண்டு இருக்கிறீர்கள். எதிர்பார்த்ததைவிட மிக எழுச்சியோடு - ஆர்வத்தோடு - ஆரவாரத்தோடு இங்கே வந்திருக்கிறீர்கள

நீங்கள் அனைவரும் இங்கு வந்தவுடன், வாயிலிலேயே உங்கள் குறைகளைப் பதிவு செய்து விட்டீர்களா? அப்போது உங்களிடத்தில் ஒரு ரசீது கொடுக்கப்பட்டிருக்கும். அந்த ரசீதை வாங்க தவறியிருந்தால் தயவு செய்து வெளியில் செல்லும்போது, நீங்கள் பதிவு செய்த இடத்தில் மறவாமல் வாங்கிச் செல்லுங்கள். ஏனென்றால் அது சாதாரண ரசீது அல்ல. அந்த ரசீதை வைத்துக்கொண்டு நீங்கள் என்னிடத்தில் கேள்வி கேட்கலாம். உங்கள் மனுக்கள் அனைத்தும் இந்த மேடையில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடப்பட்டுள்ளன.

இங்கு வந்திருக்கும் அனைவரையும் பேச வைக்க முடியாத காரணத்தால், அவற்றில் சில மனுக்களை உங்கள் முன்னால் எடுத்து, அதில் இருக்கும் பெயர்களைச் சொல்லும்போது, அவர்கள் எழுந்து சுருக்கமாக தங்கள் கருத்துகளை எடுத்து சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கண்களில் கனவுகளோடும், கையில் மனுக்களோடும், இதயத்தில் ஏக்கத்துடனும் இந்த அரங்கத்தை நோக்கி வந்திருக்கும் தமிழ்மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான வணக்கத்தையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது நீண்ட கால பிரச்னைகளுக்கு என்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

அடுத்தவர் நம்பிக்கையைப் பெறுவதுதான் ஒரு மனிதனின் மாபெரும் சொத்து. இவர் நல்லவர், நம்பிக்கையானவர், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார், இவரை நம்பி நம்முடைய கோரிக்கையை வைக்கலாம் - என்று உங்களிடம் நான் நம்பிக்கையைப் பெற்றதைத் தான் என்னுடைய சொத்தாகக் கருதுகிறேன். இத்தகைய நம்பிக்கையைப் பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல!

நீங்கள் எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்! உங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியைத் திருவண்ணாமலையில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

கடந்த 25 ஆம் தேதி காலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் முன்னால் நான் ஒரு சபதம் எடுத்தேன்! “மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு”. இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளித்த உறுதிமொழி! அந்த உறுதிமொழியின்படி அமைக்கப்பட்ட முதல் நிகழ்ச்சியை திருவண்ணாமலையில் இருந்து தொடங்கி இருக்கிறேன்!


ஜனவரி 25 ஆம் தேதி, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் வைத்து இந்த உறுதிமொழியை எடுத்தேன்! 14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி திருவாரூர் மண்ணில் தமிழ்காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் அவர்கள் தான், 95 வயது வரைக்கும் இந்த தாய்த்தமிழ் நாட்டுக்காக அயராது உழைத்த வாழ்நாள் போராளி! போராளி மட்டுமல்ல - மிகச்சிறந்த நிர்வாகி! அவரால் உருவாக்கப்பட்ட மாநிலம்தான் இந்த தமிழ்நாடு!

கடந்த பத்து ஆண்டு காலத்தில் தமிழகம் எல்லாத் துறையிலும் எல்லா வகையிலும் அதலபாதாளத்துக்கு போய்விட்டது. இந்த அதிமுக ஆட்சியில் எந்த தரப்பு மக்களுக்கும் நிம்மதியாக இல்லை. எந்தத் தொகுதிக்கும் எந்த புதிய திட்டங்களும் இல்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தொகுதிகள் கூட கேவலமாக இருக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளை இவர்கள் தங்கள் தொகுதிக்குக் கூடச் செய்து தரவில்லை!

மக்கள் பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்க திமுகவால்தான் முடியும் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களையும் இன்று வழங்கியிருக்கிறீர்கள். மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் மக்களை நான் சந்திக்கிறேன்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்! என்ற வாக்குறுதியை மீண்டும் நான் வழங்குகிறேன்.

உங்களுடைய அனைத்து பிரச்சினைகளும் எனக்கு புரிகிறது. உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் உங்கள் முன்னால் இந்த பெட்டியில் போட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனுடைய சாவி என்னிடம் தான் இருக்கப்போகிறது. (மேடையில் மக்கள் முன்னிலையில் கழகத் தலைவர் அவர்கள் தனது கையாலேயே மனுக்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியைப் பூட்டி சீல் வைத்தார்)

இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தேர்தல் நடக்கப்போகிறது. தேர்தல் முடிந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்று, நான் பதவி பிரமாணம் எடுத்த அடுத்த நாள் இந்தப் பெட்டியை நானே திறப்பேன். இந்த மனுக்கள் அனைத்தும், ஏற்கனவே நான் சொன்னதுபோல, இதற்கென தனி பிரிவு அமைக்கப்பட்டு, இந்த அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் முன்னுரிமைக் கொடுத்துத் தீர்த்து வைப்பேன். கவலைப்படாதீர்கள்.

நான் கலைஞருடைய மகன் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். நான் கலைஞருடைய மகன். நம்பிக்கையோடு செல்லுங்கள்" என்றார்.

Last Updated : Jan 29, 2021, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details