விழுப்புரம்:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 6ஆம் தேதி கார்த்திகை மகா தீபத்திருவிழாவும், 7-ம் தேதி பவுர்ணமி கிரிவலமும் நடைபெறவுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டு இருந்த நிகழ்வுகள் இரண்டு ஆண்டுகள் கழித்து, வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பேருந்துகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விழுப்புரம் போக்குவரத்து மண்டலம் சார்பாக நாளை (டிசம்பர் 5) முதல் 7-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் - திருவண்ணாமலை வழித்தடங்களில் 317 பேருந்துகள், திண்டிவனம் - திருவண்ணாமலை வழித்தடங்களில் 82 பேருந்துகள், புதுச்சேரி - திருவண்ணாமலை வழித்தடங்களில் 180 பேருந்துகள், திருக்கோவிலூர் - திருவண்ணாமலை வழித்தடங்களில் 115 பேருந்துகள், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை வழித்தடங்களில் 200 பேருந்துகள் என மொத்தம் 894 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.