திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் நேற்று (ஜன.13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் திருநாளையொட்டி கலசப்பாக்கம் தொகுதியிலுள்ள கீழ்பாலூர், மேல்சிறுவள்ளுர், மேல்சோழங்குப்பம், ஆதமங்களம் புதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் மஞ்சுவிரட்டு, காளை விடும் திருவிழா நடைபெறும்.
தற்போது கரோனா பரவலின் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தடை நீடிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா ஆகிய விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாத்தனூர் அணை ஜவ்வாதுமலை, செண்பகத்தோப்பு அணை ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா கடத்தல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபட்ட 138 நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 119 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 224 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் 206 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 1 கோடிய 15 லட்சத்து 42 ஆயிரத்து 761 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு 297 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.