திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் குப்பந்தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (60). இவரது மனைவி மாங்கனி (50). இவர்களது மகன் ராம்குமார் (27) மனநலம் பாதிக்கப்பட்டவர். மகள் மலர் செங்கம் பகுதியில் வசித்துவருகிறார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராம்குமார் தனது தாய் தந்தையிடம் தனக்கு திருமணம் செய்துவைக்கும்படி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ராம்குமார் தனது கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சாத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்பு அவர் லேசான காயங்களுடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில், நேற்றிரவு ராம்குமார் தனது தாய் தந்தையுடன் ஒரே அறையில் உறங்கியுள்ளார். பின்னர், நள்ளிரவில் திடீரென எழுந்த ராம்குமார் வீட்டின் வெளியே இருந்த அம்மிக்கல்லை எடுத்து தாய் மாங்கனி தலைமீது போட்டு கொலைசெய்துள்ளார். பின்னர், அருகே இருந்த தந்தையின் மீதும் அம்மிக்கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலைசெய்துள்ளார். பின்னர், வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து காலையில் பெற்றோரைக் காண்பதற்காக வீட்டிற்கு வந்த மலர், வீட்டில் தாய் தந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், அக்கம்பக்கத்தினர் இது குறித்து சாத்தனூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அம்மிக்கல்லைப் போட்டு கொலைசெய்த மகன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக இருந்த ராம்குமாரை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: தட்டிக்கேட்டதால் அண்ணன் கத்தியால் வெட்டிக் கொலை