திருவண்ணாமலை கிரிவலப் பாதை வனவிலங்குகள் நிறைந்த பகுதியாகும். இங்கு மான், முயல், காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கிரிவலப் பாதையில் கிரிவலம் வரும் பக்தர்கள் அனைவரும் குரங்குகளுக்கு பொறி, வாழைப்பழம், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்குவது வழக்கம்.
பொதுவான நாள்களில் கிரிவலப் பாதையில் அதிகமாகக் காணப்படும் மக்கள் நடமாட்டம், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவினால் ஆள் அரவமின்றி காணப்படுகிறது. மக்கள் யாரும் வராததால் உணவு கிடைக்காமல் குரங்குகள் அங்கும் இங்கும் தாவிக் குதித்து தவித்து வருகின்றன.
பசியில் பரிதவிக்கும் குரங்குகள் கிரிவலப் பாதையில் யாராவது வந்து வாழைப்பழம் கொடுக்க மாட்டார்களா, என்ற ஏக்கப் பார்வையுடன் கேள்வி கேட்டு அமர்ந்திருந்திருக்கின்றன. அக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக சமூக செயற்பாட்டாளர் ராஜா என்பவர், 5 தார் வாழைப்பழம், 100 பிஸ்கட் பாக்கெட்டுகள், தயிர் சாதம், புளிசாதம் உள்ளிட்டவற்றை குரங்குகளுக்கு கொடுத்து பசியாற்றினார்.