திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி அதிகாலை திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூபாய் 72,79,000 பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.
இச்சம்பவம் குறித்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் உத்தரவுப்படி வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தலைமையில் 9 தனிப்படைகள் அமைத்து ஹரியானா, ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என விசாரணையில் தெரியவந்தது. கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து கொள்ளை நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.