திருவண்ணாமலை: புதிய சமணர் படுகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து சம்புவராயர் ஆய்வு மைய அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் விஜயன் ஆகியோர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள மலை மீது ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் கோயிலுக்குத் தெற்குத் திசையில் இரு பாறைகளுக்கு நடுவே குகை ஒன்று உள்ளது என அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும் சென்னை, பெரும்பாக்கம் அரசு கல்லூரி தமிழ்த் துறைத் தலைவருமான கவிஞர் பச்சையப்பன் தெரிவித்தார்.
மேலும் அவர், அக்குகையை சாமியார் குகை என அழைக்கப்படுவதாகவும், அதன் உள்ளே சென்றால் கோடையிலும் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
சமணக் கற்பாழிகள்
அக்குகையை நாங்கள் ஆய்வு செய்தபோது, மூன்று சமணக் கற்பாழிகள் இருப்பது தெரியவந்தது. அந்தக் குகைக்கு மேலே உள்ள பாறை மீதும் மூன்று சமணர் படுகைகள் வெட்டப்பட்டிருப்பது உறுதியானது. இரு பெரிய பாறைகளுக்கு நடுவே உள்ள சமணக் குகையின் நுழைவிடம் ஒரு சிற்றாலயம் போன்ற தோற்றத்தில் உள்ளது.
நீளமான கருங்கல் சுவரும், நான்கு அடி உயரம் கொண்ட சிறிய வாயிலும் செதுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. வாயிலின் உள்ளே சென்றால், ஒரு பம்பரத்தின் அடியைப் போல, கீழ்ப்புறம் குறுகலாகவும், மேற்புறம் அகன்றும் உள்ள ஒரு பெரிய பாறையைக் காணலாம். இதன் தரைப்பரப்பில் வடக்கு நோக்கி மூன்று படுகைகள் வெட்டப்பட்டிருந்தன.
இந்தச் சமணப் படுகைகள் சற்று ஆழமில்லாமல், செதுக்கப்பட்ட நிலையிலேயே அதன் பழமையை வெளிப்படுத்துகிறது.