திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாகவும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலம் மேற்கொள்ள 5 லட்சம் முதல் 8 லட்சம் பக்தர்கள் வருகின்றனர்.
14 கிலோ மீட்டர் கொண்ட இந்த கிரிவலம் சாலையில் பக்தர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் நடை பாதை வியாபாரிகள் தற்காலிக கடைகளை போட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது கிரிவலம் வரும் பக்தர்களுக்கு இன்னல்களை ஏற்படுத்துவதால் இத்தகைய நிகழ்வுகளை தடுக்கும் வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கிரிவலப் பாதை வியாபாரிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேட்டி இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ், பக்தர்களுக்கு இடைஞ்சலாக கிரிவல பாதையில் கடைகள் அமைக்க கூடாது. மேலும் ஒலிபெருக்கிகளை வாகனங்களில் அமைத்து வியாபாரிகள் விற்பனையில் ஈடுபடக் கூடாது. மேலும் கிரிவலத்தின் போது குப்பைகளை பொது வெளியில் கொட்ட கூடாது. இந்த விதிகளை மீறும் அனைத்து கடைகளுக்கும் அபராதம் மற்றும் அடுத்த முறை இதே நிலைமை நீடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் கிரிவலத்தின் போது கிரிவலப் பாதையில் மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதி அளிக்கப்பட்ட 12 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கினால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அன்னதானம் வழங்கும்போது சேரும் குப்பைகளை அந்தந்த இடத்தில் வழங்கும் அன்னதான குழுவினர் குப்பை தொட்டிகளை அமைத்து குப்பைகளை சேகரித்து அகற்ற வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட இடங்களை தவிர வேறு இடங்களில் அன்னதானம் வாங்கினால் காவல்துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கிரிவலப் பாதையில் அமைத்துள்ள பக்தர்கள் நிழற்குடை மற்றும் அமருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நடைபாதை வியாபாரிகள் கடைகளை அமைத்தால் கைது செய்வோம். இந்த கடைகளை அங்கிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒலிபெருக்கிகளை வைத்துக்கொண்டு பக்தர்களுக்கு இடைஞ்சலாக வியாபாரம் செய்தாலும் அத்தகைய கடைகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: சேலத்தில் போதை பொருட்கள் இல்லாத 120 கிராமங்கள் அறிவிப்பு: டிஜிபி சைலேந்திரபாபு