திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அரட்டைவாடி, மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தமிழரசன். இவர் சுமார் 25 ஆடுகளைக் கொண்டு தன் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அரட்டைவாடி, தரைக்காடு பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டிச் சென்றபோது, தண்ணீர் தேடிச் சென்ற ஆடுகள் வனத்தின் அருகில் உள்ள குடிநீர்க் குட்டையில் தண்ணீர் குடித்துள்ளன. தண்ணீர் குடித்த சிறிது நேரத்திலேயே, ஒன்றன் பின் ஒன்றாக ஒன்பது ஆடுகளும் உயிரிழந்தன.
தண்ணீர் அருந்திய பின் ஆடுகள் துடிதுடித்து இறந்த பரிதாபம் அரட்டைவாடி, தரைக்காடுகளில் மான், முயல், காட்டுப் பன்றிகள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் தண்ணீர் அருந்த வரும்போது அவற்றைப் பிடிப்பதற்காக அப்பகுதியினர் தண்ணீர்க் குட்டையில் விஷம் கலந்திருக்க வேண்டும் எனவும், அதனைக் குடித்ததாலேயே ஆடுகள் இறந்திருக்கக் கூடும் எனவும் விவசாயி தமிழரசனும் அப்பகுதி மக்களும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இறந்த ஆடுகளை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரியதற்கு அரசு கால்நடை மருத்துவர் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. ஒன்பது ஆடுகள் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மனைவியைப் பார்க்க கிருஷ்ணகிரி வந்துச் சென்ற மருத்துவருக்கு கரோனா