திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, "திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் மேம்பாடு ஆகியவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறந்த முறையில் செயல்படுத்தியதால் தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது கடந்த 11ஆம் தேதி சனிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெற்றுக்கொண்டார்.
நமது மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டு 11.2 மீட்டரில் இருந்தது, தற்போது 3.4 மீட்டரில் உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள், கான்கிரீட் தடுப்பணைகள், நீர் உறிஞ்சு குழிகள், நீர் குட்டைகள், நீர் வரத்து கால்வாய்கள், பண்ணைக் குட்டைகள், அகழிகள், தனிநபர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், புனரமைப்பு பணிகள், ஏரிகளில் மரம் நடுதல் பணிகள் என மொத்தம் 87 கோடியே 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தடிநீர் பாதுகாக்கப்பட்டது.