திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ்குமார். இவருக்கும் நித்யா என்பவருக்கும் சுமார் 14 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. உமேஷ்குமார் , நித்யா ஆகிய இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் கடந்த 3 ஆண்டுகளாக நித்யா , உமேஷ்குமார் ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உமேஷ்குமார் தன்னுடைய மனைவி நித்யா ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஒரு சில மாணவர்களைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக திடுக்கிடும் புகார் ஒன்றினை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் இது சம்மந்தமாக குழந்தை நல அலுவலரிடம் புகார் அளித்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். இதன்படி ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் குழந்தை நல வாரியம் ரகசிய விசாரணையில் ஈடுபட்டது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆசிரியை நித்யா ஒரு சில மாணவர்களுக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது ஊர்ஜிதமானது. குழந்தை நல வாரியம் ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை நித்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.
அதன் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ஆசிரியை நித்யாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியை நித்யாவை மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளி மாணவர்களை ஆசிரியையே தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.