திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. கடலூர் மாவட்டம் வரை சாத்தனூர் அணையின் நீர் செல்கிறது. பாசன கால்வாய் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
சாத்தனூர் அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை ஒருமுறை கூட இந்த அணை தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக தற்போது அணையில் 30 அடிக்கு மேல் மண்ணும், சேருமே நிரம்பியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் சாத்தனூர் அணையில் 40 அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருக்கும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகின்றனர். தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் வழக்கத்தைவிட அணையின் நீர்மட்டம் 20 அடி குறைந்து காணப்படுகிறது.