திருவண்ணாமலை: ஆரணி அருகே உள்ள ஏரிகுப்பம் கிராமத்தில் யந்திர வடிவில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இதில், யந்திர வடிவில் சனீஸ்வர பகவான் காட்சியளிப்பதால் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
மேலும், இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி என்பதால், ஏரிகுப்பம் யந்திர சனீஸ்வர பகவான் கோயிலுக்கு திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். மேலும், நெய் விளக்கு ஏற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதனிடையே இன்று(டிச.20) மாலை சுமார் 5.20 மணியிலிருந்து மகரம் ராசியிலிருந்து, கும்பம் ராசிக்கு சனீஸ்வர பகவான் இடம் பெயர்வதால், யந்திர சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பரிகார பூஜை நடத்தப்பட்டன. இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.