திருவண்ணாமலை: தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பதற்கும், ஆட்சியில் அமர்ந்தவுடன் அதனை தக்க வைத்துக் கொள்வதற்கும் போட்டி போட்டுக்கொண்டு தேவையற்ற இலவசங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வந்தால், இலங்கைக்கு வந்த பொருளாதார நெருக்கடிபோல இந்தியாவுக்கும் வரும்.
தமிழ்நாட்டில் உணவுக்கும், மதுவுக்கும், போதைப்பொருளுக்கும் வேறுபாடு தெரிவதில்லை. இதன் விளைவாக கள்ளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. உலகளவில் பல நாடுகள் கள்ளை உணவுப்பட்டியலில் வைத்துள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் கள்ளை உணவுப்பட்டியலில் வைத்துள்ளது.
கள்ளில் கலப்படம் செய்ததால்தான் கள்ளுக்குத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் பாலில் 69 விழுக்காடு கலப்படம் செய்யப்படுவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்ட நிலையில், பாலை ஏன் தடை செய்யவில்லை? ஆனால், கலப்படம் செய்ததால் மட்டுமே கள்ளை மட்டும் தடை செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் கள்ளுக்குத் தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்குத் தடை செய்துள்ள ஆளும் அரசு, ஆளுமை திறன் இல்லாத அரசாக உள்ளது. ஊழல், லஞ்சம், முறைகேடு ஆகியவற்றை விதைப்பதற்குத்தான் தமிழ்நாடு அரசு விலையில்லா அரிசி விநியோகத்தை செய்துவருகிறது” என விமர்சித்துப் பேசினார்.
ஆளும் அரசு ஆளுமை திறன் இல்லாத அரசாக உள்ளது - நல்லசாமி விமர்சனம் இதையும் படிங்க:போதை, மது, சூது இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், முழங்கிய அன்புமணி ராமதாஸ்