கொள்ளையனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் - கொள்ளையனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை: சாலையில் சென்று கொண்டிருந்தவரிடம் மொபைல் போன், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
![கொள்ளையனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் கைது செய்யபட்ட அருணாச்சலம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:01:04:1596789064-tn-tvm-01-goondas-arrest-script-7203277-07082020084944-0708f-1596770384-851.jpg)
திருவண்ணாமலை மாவட்டம், வட அரசம்பட்டு கிராமம், அரசு ஊழியர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் உதயகுமார் (32). இவர் கீழ்நாச்சிபட்டு கிராமம் மல்லிகா திருமண மண்டபம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரை மடக்கிப்பிடித்து அவரிடம் இருந்த மொபைல் போன், ரூபாய் 3 ஆயிரத்து 250 ஆகியவற்றை வழிப்பறி செய்து சென்றனர்.
பின் உதயகுமார் இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அந்த நபர் அரசம்பட்டு கிராமம், அன்னை ரமாபாய் நகரைச் சேர்ந்த எழிலரசன் மகன் அருணாச்சலம் (20) என்பது தெரியவந்தது. பின் அவரை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அருணாச்சலத்தின் மீது ஏகப்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அருணாச்சலத்தை வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த ஆண்டில் இதுவரை 80 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை எலந்தப்பட்டு மலைப் பகுதியில் 1, 400 லிட்டர் கள்ளச் சாராய ஊறலை மதுவிலக்கு காவல் துறையினர் கண்டுபிடித்து அழித்தனர்.
மேலும் 180 மி.லி. கொள்ளளவு கொண்ட 32 மதுபாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்திய முத்து, 55 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த சங்கர், தமிழ் குமார் ஆகிய 3 நபர்களை திருவண்ணாமலை மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.