திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழா கடந்தவாரம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அப்போது கோயில் ஊழியர்கள் கோயிலுக்குள் வர முயற்சித்தபோது, வெளியூரிலிருந்து வந்த காவல் துறையினர் இந்து சமய அறநிலையத் துறை, கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஊழியர்களைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக உள்ளே விடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக காவல் துறையினர் கோயிலுக்குள் நுழைய முயற்சித்தபோது கோயில் நிர்வாக ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இப்படி காவல் துறைக்கும் கோயில் நிர்வாக ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் உள்ள கோயில் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு காவல் துறையினர் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் கொட்டும் மழையிலும் சாமி தரிசனம் செய்வதற்கு வந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெளியூரிலிருந்து அண்ணாமலையாரை தரிசிக்க வந்த பக்தர்கள், காவல் துறை பாதுகாப்பு சரியாக இல்லாத காரணத்தால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாமி தரிசனம் செய்ய நேரமாகிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் இல்லாததால் கோயிலில் தள்ளுமுள்ளும் பெரும் குழப்பமும் நேரிட்டது. பாதுகாப்புப் பணியில் காவலர்கள் இல்லாததாலும் விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்ததால் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் கோயிலுக்குச் செல்வதும் கோயிலுக்குள் பக்தர்களை ஒழுங்குபடுத்துவதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.