திருவண்ணாமலை மாவட்டம்ஆரணி அடுத்த சேவூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 700 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த வாரம் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளியிலேயே புகைப்பிடித்தது மட்டுமல்லாமல், சக மாணவியரின் முகத்தில் புகை விட்டுள்ளார். இதனால் அந்த மாணவி ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில் ஆசிரியர்கள் திலீப் குமார், வெங்கடேசன், நித்தியானந்தம், பாண்டியன் ஆகியோர் சிகரெட் பிடித்த பள்ளி மாணவனை கண்டித்து அடித்துள்ளனர். இதனால் மாணவன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்கிய ஆசிரியர்களை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சந்தோஷ் ஆகியோர் பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்தினர். அதன்பின் ஆசிரியர்கள் திலீப் குமார் மற்றும் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்தும், நித்தியானந்தன் என்ற ஆசிரியரை கேளூர் அரசு பள்ளிக்கும் பாண்டியன் என்ற ஆசிரியரை முள்ளண்டிரம் அரசு பள்ளிக்கும் பணியிடம் மாற்றம் செய்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உத்தரவிட்டார்.