திருவண்ணாமலையில் ஊரடங்கை ஒட்டி கிரிவலப்பாதையில் உள்ள சாந்தி மலை ஆசிரமத்துக்குச் சொந்தமான இடத்தில் வெளியூரில் இருந்து வந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருப்பவர்கள், ஆதரவற்றோர், மனநோயாளிகள், முதியோர் உள்பட 49 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் தேதி முதல் மனநல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் காலை, மாலை இரு வேளைகளில் தியானம், யோகா, கும்மி பாட்டு பாடுதல், நடனமாடுதல், தனித்திறன் வெளிப்படுத்துதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதனால், அவர்கள் உற்சாகமடைந்து மகிழ்ச்சியாக உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் சாந்தமாகி தங்களைப் பற்றிய விவரங்களை தெரிவிக்கின்றனர். இவர்களை மாவட்ட சமூக நல அலுவலர் கிருஷ்ணா டார்த்தி, சமூகநலத்துறை அலுவலர் சாந்தினி, பயிற்சியாளர் முத்துசெல்வம், தன்னார்வலர் நாகராஜ் ஆகியோர் நன்றாக கவனித்து வருகின்றனர்.