திருவண்ணாமலை: வந்தவாசி கோட்டைக்குள் முஸ்லிம் தெருவில் வசித்து வருபவர், இப்ராஹிம். பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். சாய்னா என்ற மனைவியும் அப்துல் ரசூல் என்ற 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி குழந்தை ரசூலுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையொட்டி, வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 2 நாட்களாக சிகிச்சையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பின் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் கவனிப்பின்றி, அலட்சியமாக செயல்பட்டதால், குழந்தை இறந்ததாகக் கூறி நேற்று காலையில் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் முருகானந்தம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.