திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 26ஆம் தேதி அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு, அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யும் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், துறை சார்ந்த அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் பக்தர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்து 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், பாதுகாப்பு பணிகளுக்காக 14 ஆயிரம் காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 85 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளதாகவும் திட்டமிடப்பட்டது.