மதுரையை அடுத்த திருச்சுழியில் பிறந்தவர் ரமணர். இவர் அண்ணாமலையாரின் மீது கொண்ட பக்தியால் திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் புறப்பட்டார். பின்னர் மாம்பழம்பட்டில் இறங்கி, அங்கிருந்து நடந்தே திருவண்ணாமலையை வந்தடைந்தார்.
பகவானாய் ரமணரின் அவதாரம்
தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் பாதாள லிங்கம், மலைமீதுள்ள விருபாட்சி குகை ஆகிய இடங்களில் தவமிருந்தார். அவர் 1950ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அன்று திருவண்ணாமலையில் முக்தியடைந்தார்.
இந்நிலையில், ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் சித்திரை மாதம் ரமணரின் ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 71ஆவது ஆராதனை விழா இன்று நடைபெற்றது.
எளிய முறையில் ஆராதனை
அதிகாலை ருத்ர ஜெபம், அதன் பின்னர் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு தமிழ் பாராயணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆண்டுதோறும் இவ்விழாவில் வெளிநாட்டினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கருணா தொற்றின் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி எளிய முறையில் நடைபெற்றது.