காவிரிக்கும் ரஜினிக்கும் சம்மந்தம் இல்லை - சத்தியநாராயண ராவ் திட்டவட்டம் திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயிலில் பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு, அண்ணாமலையார் திருக்கோயில் சார்பாக சிவாச்சாரியார்களால் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
சாமி தரிசனம் செய்ததைத் தொடர்ந்து சத்தியநாராயண ராவ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "அண்ணாமலையார் அருளால் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கும் கிடையாது" என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் செல்லும் மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வாய்ப்பு இல்லை. மேலும் நட்பு ரீதியாக தான் அனைவரையும் சந்தித்து வருகிறார்.
குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் தானாக சென்று யாரையும் சந்திப்பதில்லை அந்தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் நட்போடு அழைப்பதனால் அவர்களை நேரில் சந்திது பேசுகிறார். எந்த கட்சியினரும் அவர்களோடு இனைந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்தை அழைப்பதில்லை. மேலும், நடிகர் ரஜினிகாந்த் இனி அரசியலுக்கு வர மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தங்களின் தந்தை பிறந்த ஊரில், தாய் தந்தையின் சிலையை பிரதிஷ்டை செய்து வணங்கியதாகவும், தந்தை பிறந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை செய்து கொடுத்து இருப்பதாகவும்" தெரிவித்தார். மேலும், 'லால்சலாம்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருப்பதால் ரஜினிகாந்தின் மகளே படம் நன்றாக வந்து இருப்பதாக கூறியுள்ளார்.
ஜெய்லர் திரைப்படம் நல்ல வெற்றியைக் கண்டிருக்கும் நிலையில், அதைக் காட்டிலும் லால்சலாம் திரைப்படம் வெற்றி வசூல் அதிகமாக இருக்கும் எனவும் லால்சலாம் திரைப்படத்தை ரசிகர்கள் இரண்டு மூன்று முறை பார்க்கும் அளவிற்கு இருக்கும் எனவும் தெரிவித்தார். தொடர்ச்சியாக, காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், "நடிகர் ரஜினிகாந்த் காவேரி நதிநீர் பற்றி பேச வாய்ப்பு இல்லை, அந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள். காவேரி நதிநீர் பிரச்சினைக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் சம்பந்தம் இல்லை. மேலும் காவேரி நிதி நீர் பிரச்சனையில் தீர்வு கிடைக்கும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:“தமிழகத்திற்கு திறக்க தண்ணீர் இல்லை” - காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர்!