திருவண்ணாமலை: மாதந்தோறும் பெளவர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் சிவாலயத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்கு வருவது வழக்கம். வழிபாட்டின் ஒரு சிறப்பு அம்சமாக, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 14 கி.மீ தூரத்திற்கு நடந்து மலையைச் சுற்றி கிரிவலம் வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. மலையைச் சுற்றி பஞ்ச தீர்த்த குளங்கள் என அழைக்கப்படும் ஐந்து குளங்கள் அமைந்துள்ளது. ஈசானியா குளம், தாமரைக்குளம், ஐயங்குளம் மற்றும் அண்ணாமலையார் திருக்கோவிலின் உள்ளே அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தம் மற்றும் பிரம்ம தீர்த்த குளம் ஆகிய 5 தீர்த்த குளங்கள் அமைந்துள்ளது.
இந்த தீர்த்த குளங்களில் அண்ணாமலையாருக்கு வருடத்தில் பல்வேறு விஷேச நாட்களில் தீர்த்த வாரி திருவிழாக்கள் மேற்கொள்ப்படும். குறிப்பாக திருவண்ணாமலை ஐய்யங்குள தெருவில் அமைந்துள்ள ஐய்யங்குளத்தில் ஆண்டுக்கு மூன்று முறை அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறும். மேலும் கார்த்திகை தீபத் திருவிழா உற்சவத்தின் போது மூன்று நாட்கள் இந்த ஐயங்குளத்தில் சந்திரசேகர், முருகர் மற்றும் பராசக்தி அம்மனின் தெப்பல் பவனி உற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த குளத்தில் அதிக அளவில் சேறு படிந்து உள்ளதாலும், குளத்தில் படர் கொடிகள் அதிக அளவில் முளைத்து குளம் முழுவதும் படர்ந்து உள்ளதாலும் குளத்தின் தண்ணீரின் தன்மை மிகவும் மாசுபட்டு உள்ளது. இதனையடுத்து இந்த தீர்த்த குளத்தில் உள்ள சேற்றை தூர்வாரி, குளக்கரைகளை சீரமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.