திருவண்ணாமலை: வேங்கிக்கால் பஞ்சாயத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக ரயில்வே பாதையைக் கடந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மத்திய கூட்டுறவு வங்கி, மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகம், வருமான வரி அலுவலகம், காவல்துறையைக் குடியிருப்பு, வேளாண்மைத் துறை அலுவலகம், தோட்டக்கலைத் துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அரசு ஊழியர்கள் ரயில்வே பாதையைக் கடந்து சென்று தான் தங்களது பணியை மேற்கொண்டு வந்தனர்.
அவ்வாறு ரயில்வே பாதையைக் கடந்து செல்லும்போது ரயில் வரும் நேரங்களில் தடுப்புகள் அமைப்பதால் உரிய நேரத்திற்கு பணிக்குச் செல்ல இயலாமல் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ரயில் தண்டவாளத்தின் அடியில் பள்ளம் தோண்டப்பட்டு சுரங்கப்பாதை அமைத்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றுவர வழி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவ்வப்போது பெய்த கனமழையின் காரணமாகச் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் வாகன ஓட்டைகள் பெரும் சிரமத்திற்குத் தள்ளப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மழை நீர் சுரங்கப்பாதையில் தேங்காத வண்ணம் ரயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதைக்கு மேல் கனமான இரும்புகளைக் கொண்டு மேற்கூரையை அமைத்தனர். இதனால் பகல் நேரத்திலேயே சுரங்கப்பாதையில் இரவு போல் காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணம் செய்து வருகின்றனர்.