திருவண்ணாமலை: செங்கம் அடுத்த பரமனந்தல் அம்பேத்கர் நகர், பழைய அம்பேத்கர் நகர், காந்தி நகர் என்னும் பகுதிகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட அனைத்து சமூக குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இறப்பவர்களை நல்லடக்கம் செய்ய காலம் காலமாகப் பயன்படுத்தி வந்த மயான பாதையில் சடலத்தை எடுத்துச்செல்ல ராமநாதன் என்பவர் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
மயான பாதை வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அவருடைய அண்ணன் முனுசாமி அவரது தம்பி ராமமூர்த்தி, தம்பி சம்பத் என்பவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் சடலத்தை எடுத்துச்செல்ல 12 அடி அகலம் உள்ள வழியினை அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக தந்துள்ளனர்.
ஆனால், ராமநாதன் தன் பாகத்தில் உள்ள வழியினை தர மறுத்து பயிர்செய்து மயான பாதைக்கு செல்ல எதிர்ப்புத் தெரிவித்தும், மீதமுள்ள வழியான ஆற்றின் நீர் பிடிப்புப்பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டு விவசாயம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் சடலத்தைக்கொண்டு செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
நேற்று அப்பகுதியில் மணி என்பவர் உயிரிழந்ததை அடுத்து அவ்வழியாக சடலத்தைக் கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர். அப்போது மயான பாதை வழியே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றக்கோரி சவத்தை சாலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.