மோசடி வழக்கில் தனியார் நிதி நிறுவனத் தலைவர் மற்றும் மேலாளர் கைது திருவண்ணாமலை:செய்யாறு வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏ.பி.ஆர் (APR Finance) தனியார் நிதி நிறுவனம் என்ற நிதி நிறுவனத்தைச் செய்யாறு பகுதியைச் சேர்ந்த அல்தாப் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை அன்று தங்க நகை சீர்வரிசை சாமான், மளிகை பொருட்கள், உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாகக் கூறி ஏராளமான பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி, பணம் கட்டியவர்கள் பொருட்கள் பெறுவதற்கு ஏ.பி.ஆர் தனியார் நிதி நிறுவனம் முன்பு குவிந்தனர். அப்போது பணம் கட்டியவர்களுக்குப் பொருட்கள் சரியான முறையில் தரவில்லை எனக் கூறப்படுகிறது. பணம் கட்டிய பொதுமக்களுக்கு ஏ.பி.ஆர் தனியார் நிதி நிறுவனம் பொருட்கள் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
மேலும், தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனத்திற்குச் சென்று பொருட்களைப் பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், பணம் கட்டி ஏமாந்ததை அறிந்த பொதுமக்கள் ஆத்திரத்தில் ஏ.பி.ஆர் தனியார் நிதி நிறுவனத்தை அடித்துச் சூறையாடினர். தொடர்ந்து நிறுவனத்தின் குடோனில் இருந்த டேபிள், சேர், ஃபேன், ஏ.சி, கட்டில், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாகப் பொதுமக்கள் சூறையாடி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக ஏ.பி.ஆர் நிதி நிறுவனத் தலைவர் அல்தாப் விளக்கம் கொடுத்திருந்தார். அதில், "பட்டாசு பொருட்கள் தீர்ந்து விட்டதால் சிவகாசிக்குச் சென்று பட்டாசு வாங்கச் சென்றேன். ஆனால் சில விஷமிகள் தலைமறைவாகிவிட்டதாக வதந்திகளைப் பரப்பி எனது அலுவலகம் மற்றும் வீட்டைச் சூறையாடியுள்ளனர். தற்போது என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளன. என் குடும்பத்தைக் கொலை செய்து விடுவதாக மிரட்டல்கள் வருகின்றன.
என் உயிருக்குப் பாதுகாப்பில்லை ஆகையால் போலீசார் என் உயிர் பாதுகாப்பு தர வேண்டும். மக்களுக்குச் சேர வேண்டிய பொருட்களை வழங்க நான் தயாராக உள்ளேன்" என ஒரு வீடியோ பதிவில் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து ஏ.பி.ஆர் நிதி நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் ஏ.பி.ஆர் நிறுவனத் தலைவர் அல்தாப் என்பவரை போலீசார் வலைவீசித் தேடி வந்த நிலையில், ஆந்திரா மாநிலத்தில் நேற்று அல்தாப் மற்றும் கிளை மேலாளர் கமலக்கண்ணன் ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, திருவண்ணாமலை விரைவு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா முன்பு ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவரையும் வேலூர் மத்தியச் சிறையில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளை மகிழவைத்த அன்னை தெரசா அறக்கட்டளை.. பத்தாண்டுகளாக தொடரும் சேவை..!