தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசோடு இணைந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நன்மை - பிரேமலதா விஜயகாந்த் - Thiruvannamalai news

இன்று திரைப்படம் வெளியாகி மறுநாளே மாபெரும் வெற்றி என்ற திரைப்பட பாணியில்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் அமைந்திருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசோடு இணைந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நன்மை - பிரேமலதா விஜயகாந்த்
மத்திய அரசோடு இணைந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நன்மை - பிரேமலதா விஜயகாந்த்

By

Published : Jun 2, 2023, 8:17 AM IST

பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

திருவண்ணாமலை:உலகப் புகழ் பெற்ற அண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று (ஜூன் 1) மாலை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் “கர்நாடக முதலமைச்சர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்தித்து மேகதாது அணை விவகாரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படாமல் இருக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதற்கான தடை ஆணையைப் பெற வேண்டும். இன்று திரைப்படம் வெளியாகி மறுநாளே மாபெரும் வெற்றி என்ற திரைப்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி போன்று முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் அமைந்துள்ளது.

இது பற்றி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள், தங்களது கடமையைச் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், அடிப்பதும், மிரட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என்பதற்கு இதுவே சாட்சியாக அமைந்து உள்ளது. வருமான வரிச் சோதனையின்போது அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அவரது சகோதரர் ஆகியோரை கைது செய்ய முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விஜயகாந்த் நல்ல உடல் நிலையோடு இருக்கிறார். வெகு விரைவில் பொதுமக்கள் அவரை பார்க்கலாம். கடந்த அதிமுக ஆட்சியிலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி வகித்தும், தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை.

மத்தியில் ஆட்சி செய்யும் அரசோடு இணைந்து இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்ய முடியும். இதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து மத்திய அரசோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என தெரிவித்தார். முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்ற நிலையில், நேற்றைய முன்தினம் தமிழ்நாட்டுக்கு திரும்பினார்.

இதற்கு எதிர்கட்சிகள் உள்பட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவகுமார், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பேசியதற்கும் திமுக கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு எதிர்கட்சியினர், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது பகிரங்க எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:mekedatu dam issue: மேகதாது அணைக்கு ரூ.1000 கோடி கர்நாடக அமைச்சர் டிகே.சிவக்குமார்.. ஆட்சிக்கு வந்தவுடன் வேலையை காட்டுவதா? என துரைமுருகன் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details