திருவண்ணாமலை:தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று(டிச.10) நடைபெற்றது. இந்த தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 167 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர்.
அந்த வகையில், இரண்டாம் நிலை காவலர் தேர்வு திருவண்ணாமலை அடுத்த கீரனூர் பகுதியில் உள்ள சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது அங்கு தேர்வு எழுதிக் கொண்டு இருந்த, அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணான காளிகா(22) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர் இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அத்தகவலின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பின்னர் காளிகாவை பரிசோதனை செய்து மருத்துவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மயிலாடுதுறை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு..!
ஆனால் காளிகா, தான் வலியை பொறுத்துக் கொண்டு தேர்வை எழுதி முடித்து விட்டு வருவதாகக் கூறியுள்ளார். ஆம்புலன்ஸை தயார் நிலையில் வைக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், சிறிது நேரத்திலேயே பிரசவ வலி அதிகரித்தால் உடனடியாக காளிகா திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்குச் செயல்படும் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மணி நேர தீவிர சிகிச்சைக்குப் பிறகு காளிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது காளிகா மற்றும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளிகா, காவல் துறையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும், மனம் தளராமல் காவலர் பணிக்காக மிகுந்த முயற்சி எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் பிரசவ வலி ஏற்பட்டு, துரித சிகிச்சை அளித்து தாயையும், சேயையும் நலமுடன் மீட்டது, காளிகாவின் குடும்பத்தினர், காவலர்கள் ஆகியோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க:கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை வென்ற அஷ்வினி - தனிஷா ஜோடி!