திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர்கள் லட்சுமி, சசிகலா மற்றும் அமிர்தம். இவர்கள் உள்பட நான்கு பேர் சேர்ந்து மங்கலம், ஆனந்தல், வேடந்தவாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 100க்கும் மேற்பட்டோரிடம் ஆசை வார்த்தைக்கூறி கோடிக்கணக்கில் பணமும், தங்க நகைகளையும் கடனாகப்பெற்றுள்ளனர்.
தங்களுக்கு வங்கியிலிருந்து 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வரவேண்டியுள்ளதாகக் கூறியும், காவல் துறையின் தலைவர் எழுதியதாக கடிதத்தையும் காண்பித்து கிராம மக்களை ஏமாற்றியுள்ளனர். பின்னர், ஆண்டுகள் பல கழிந்தும் பணமும், நகையும் வராததால் பொதுமக்கள் பல முறை முறையிட்டதையடுத்து எழுதப்படாத பத்திரமும், பணத்திற்காகப் பல்வேறு வங்கிகளின் காசோலைகளையும் கொடுத்து சமாதானப்படுத்தினர்.
குறிப்பிட்ட கால இடைவெளி வரையிலும் அசல் பணம் மற்றும் நகையையும் கொடுக்காமல் ஏமாற்றியும் கொடுத்தவர்களை 4 பெண்களும் மிரட்டியும் வந்துள்ளனர். குறிப்பாக காவல் நிலையம் சென்றால், பணம் வந்தவுடன் காவல் நிலையம் சென்றவர்களுக்கு நிச்சயம் பணம் மற்றும் நகைகளை கொடுக்க மாட்டோம் என்றதால், செய்வதறியாத கிராமமக்கள் புகார் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.