திருவண்ணாமலை: செங்கம் அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த விவசாயியின் கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நடராஜ் (51). இவர் அதே பகுதியில் வேளாண்மை செய்துவருகிறார். இந்நிலையில், நேற்று (செப். 23) மாலை நடராஜுக்குத் தொலைபேசியில் அழைப்பு வந்ததால், தான் சிறிது நேரத்தில் திரும்பிவருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.
இரவு முழுவதும் நடராஜ் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த அவரது மனைவி, இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இந்நிலையில், இன்று (செப். 24) காலை நடராஜ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடப்பதாக தகவலைக் கேட்ட அவரது மனைவி, உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த செங்கம் காவல் துறையினர், உயிரிழந்த நடராஜ் உடலை மீட்க முயன்றனர். ஆனால், நடராஜின் உறவினர்கள் கொலைசெய்த நபரை உடனே கைதுசெய்யக்கோரி வலியுறுத்தி உடலை எடுக்க மறுப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கும், காவல் துறையினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளாக மாறியது.