திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் செல்வி. இவரின் கணவர் சீனுவாசன் பா.ஜ.கவில் மாவட்ட விவசாய பிரிவு தலைவராக உள்ளார். ஏற்கனவே கரியமங்கலம் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தனது மனைவியான செல்வியை நிறுத்தி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் சீனிவாசனிடம், அடுத்த முறை நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் மீண்டும் தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்றால் திருமணம் செய்து கொண்ட இளம் வயது பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஜோசியக்காரர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் சீனுவாசன், தனது உறவுக்கார பெண்ணிடம் அவர்களது மருமகளை தன்னுடன் நெருக்கமாக பழக ஏற்பாடு செய்யுமாறும், அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று தொலைபேசியில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றிய பெண்ணிடம், தொடர்ந்து தகாத முறையில் பேசி, தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, அந்த பெண்ணை வேலை இருப்பதாக கூறி, காரில் அழைத்து சென்ற சீனிவாசன், வனப்பகுதிக்குள் அழைத்து சென்று மானபங்கப்படுத்தி, அத்துமீறி உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட பெண், இது குறித்து செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.