திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் காவல் தெய்வமான அருள்மிகு பிடாரியம்மனுக்கு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிடாரியம்மன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நினைத்தாலே முக்திதரும் அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து காலையிலும் இரவிலும் 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் திருக்கோயிலின் நான்கு மாட விதிகளைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி அருள்பாலிப்பார்.