திருவண்ணாமலை: இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தர மறுத்த மர்ம நபர்கள், பெட்ரோல் பங்க் மேலாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
திருவண்ணாமலை - வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது, திருச்செந்தூர் முருகன் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று (டிச.24) இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் பெட்ரோல் போட்டுவிட்டு, 'அதற்குரிய பணத்தை இவர் கொடுப்பார், அவர் கொடுப்பார்' என மாறி மாறி ஒருவரையொருவர் கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட கூச்சல் சத்தத்தைக் கேட்டு மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.