திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி, ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி கிரிவலம் உலகப் பிரசித்தி பெற்றது.
குறிப்பாக கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பௌர்ணமி ஆகிய இரண்டு தினங்களில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்கின்றனர். பின்னர் 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் மலையைச் சிவனாகக் கருதி கிரிவலம் மேற்கொள்வார்கள்.
அதே போன்று ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தன்று தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொள்வார்கள்.