திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா ஆங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் பஞ்சமூர்த்தி (45) என்பவரின் தம்பி அன்பழகன், கடந்த ஜூலை 18ஆம் தேதி இசுக்கழி காட்டேரி கிராமத்தில் ஒருவர் மீது இருசக்கர வாகனத்தை மோதியதில் அவர் இறந்துள்ளார்.
இவ்விபத்து சம்பந்தமாக வெறையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உள்பட சிலர் இந்த விபத்தை வைத்து பணம் பறிக்கும் நோக்கத்தோடு, விபத்து ஏற்படுத்தியவரின் அண்ணன் பஞ்சமூர்த்தியிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று பஞ்சமூர்த்தியையும் அவரது உறவினரான முத்துவேலையும் இசுக்கழி காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த பழனி, இசுக்கழி காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாகண்ணு மற்றும் மூர்த்தி ஆகிய மூவரும் கடத்திச் சென்று ஆறு லட்சம் பணம் கொடுத்தால்தான் உங்களை விடுவோம் இல்லையென்றால் உங்கள் நிலத்தை எழுதிக் கொடுத்துவிடு என மிரட்டியுள்ளனர்.
இதுசம்பந்தமாக பஞ்சமூர்த்தி வேட்டவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ராணி வழக்குப் பதிவு மிரட்டல் விடுத்த மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார். மேலும், இதுபோன்ற விபத்து, இதர வழக்குகளில் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்க முயலும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் எச்சரித்துள்ளார்.