திருவண்ணாமலை:குன்னத்தூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சரவணன் (39). திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 18ம் தேதி போளூர்-ஆரணி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சரவணனுக்கு நேற்றிரவு (பிப்.20) மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி சரவணனின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. சரவணன் மூளைச்சாவு அடைந்தாலும், தானமாக வழங்கப்பட்ட அவரது உடலுறுப்புகள் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. உடல் உறுப்புகளை தானமாக பெற்றவர்கள், சரவணனின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.