திருவண்ணாமலை:பிப். 12ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு இடங்களில் அடுத்தடுத்து ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் மூலம் உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், உத்தரவின் பெயரில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இதனிடையே ஹரியானா மாநிலத்தில் இருந்து முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் இருவரையும் கைது செய்து விமான மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சாலை மார்க்கமாக திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் குதரத்பாஷா மற்றும் அப்சர் உசேன் ஆகிய இருவரையும் கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.