தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 ஆண்டுகளுக்குப் பின் கோடை விழாவை காணத் தயாராகும் ஜவ்வாது மலை! - மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில் மூன்றாண்டு இடைவெளிக்குப்பின் நடைபெற இருக்கும் ஜவ்வாது மலை கோடை விழாவுக்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

3 ஆண்டுகளுக்குப் பின் கோடை விழாவை காணத் தயாராகும் ஜவ்வாது மலை!
3 ஆண்டுகளுக்குப் பின் கோடை விழாவை காணத் தயாராகும் ஜவ்வாது மலை!

By

Published : Jun 8, 2023, 2:19 PM IST

3 ஆண்டுகளுக்குப் பின் கோடை விழாவை காணத் தயாராகும் ஜவ்வாது மலை!

திருவண்ணாமலை:கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் கோடை விழா நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வரும் ஜவ்வாது மலைப் பகுதிகளில், அப்பகுதி மக்கள் பயனடையும் வகையிலும், அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் பல்வேறு செயல்பாடுகள் நடைபெறும்.

மேலும், பொதுமக்கள் பங்குபெறும் வகையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளுடன் விளையாட்டுப் போட்டிகள், கிராமிய இசை, தமிழர் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாகப் பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம், மயிலாட்டம் மற்றும் பூக்கள், பழ வகைகளால் செய்யப்பட்ட அழகிய வடிவமைப்புகள், உணவுத் திருவிழா என பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும்.

குறிப்பாகச் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் இந்த கோடை விழாவினை, ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அருகே உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கில் கலந்து கொண்டு கோடை விழா கண்காட்சியைக் கண்டு ரசிப்பர்.

கரோனா வைரஸ் தாக்குதலையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் கோடை விழா ஜவ்வாது மலையில் நடைபெறவில்லை. இந்நிலையில், மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இந்த ஆண்டு, கோடை விழா ஜவ்வாது மலையில் அடுத்த மாதம் முதல் வாரம் அல்லது இந்த மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஜவ்வாது மலையில் நடைபெற உள்ள கோடை விழாவிற்கான இடங்களைத் தேர்வு செய்ய, நேற்று (ஜூன் 7) மாவட்ட ஆட்சியர், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது வரை மூன்று இடங்கள் கோடை விழா நடைபெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் எந்த இடத்தில் கோடை விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த விழாவில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர், மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.

இதையும் படிங்க:ரயில்களை குறிவைக்கும் முயற்சியா? ரயில் பாதையில் தென்னை மரத்துண்டு வைத்த சம்பவத்தால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details