திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி பகுதியில் அல் அமீன் நர்சிங் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராம்நதி மற்றும் அஞ்சலி ஆகியோரது மகள் கோதை லட்சுமி பிஎஸ்சி நர்சிங் இறுதி ஆண்டு பயின்று வந்தார்.
ராம்நிதி மற்றும் அஞ்சலி பெங்களூரில் ஜூஸ் கடை நடத்தி வருவதால், மாணவி கோதை லட்சுமி கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு கோதை லட்சுமி தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இறந்த நிலையில் கிடந்த கோதை லட்சுமியை கண்ட சக மாணவிகள் விடுதி காப்பாளரிடம் தகவல் அளித்து உள்ளனர்.
இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் கோதை லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக கல்லூரி விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகள், விடுதி காப்பாளர்கள், மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இறுதி ஆண்டு நர்சிங் மாணவி அறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் சக மாணவ மாணவியர் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: போலி சாஃப்ட்வேர் மூலம் அதிக விலைக்கு ரயில் டிக்கெட் விற்பனை: முக்கிய குற்றவாளி கைது