திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை 243 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றிய செவிலியர் 7 பேர், மும்பையில் இருந்து வந்த 7 பேர், கேரள மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர், சென்னையிலிருந்து வந்த 4 பேர், திருச்சி 1, காஞ்சிபுரம் 1 என மொத்தம் 21 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகி உள்ளதால், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 264 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் அரசு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வார்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செவிலியரின் வீடுகள் உள்ள பகுதிகளான திருவண்ணாமலை அடுத்த தென்றல் நகர் 4 வது தெரு, தாமரை நகர் நான்காவது தெரு, மாரியம்மன் கோயில் தெரு, பவித்ரம், தீபம் நகர், நேதாஜி நகர், தேனிமலை உள்ளிட்டப் பகுதிகளில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு தூய்மைக் காவலர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, குளோரின் பவுடர் வீதிகள் முழுவதும் வீசப்பட்டன.