திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது 14 கி.மீ., தொலைவு கொண்ட கிரிவலம். இந்த கிரிவலப் பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல்வேறு திருவிழா காலங்களில் பல லட்சம் பக்தர்களும் கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசித்து வருவது வழக்கம்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் கிரிவலப் பாதையைத் தூய்மையாகப் பராமரித்தல் குறித்த ஆய்வு கூட்டம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாத்துரை, செங்கம் மற்றும் கலசபாக்கம் ஆகிய தொகுதிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, தொண்டு நிறுவனங்கள், பல்வேறு சமூக அமைப்புகள், நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுக்க 14 கி.மீ., தொலைவிற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 7 குழுக்களுக்கும் தனித்தனியாக கிரிவலம் பாதை முழுக்க 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அப்பகுதிகளில் ஆன்மீக பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், கிரிவலப் பாதை முழுக்க எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.