திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள், டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலருமான தீரஜ்குமார் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி உள்ளிட்ட அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீரஜ்குமார், "திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு 747 மில்லிமீட்டர் பெய்திருக்கிறது. சராசரி மழை அளவு 468 மில்லி மீட்டராகும். ஆனால் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட அதிகமாகப் பெய்திருக்கிறது.
மேலும் வடகிழக்குப் பருவமழை ஆண்டு சராசரி 446 மில்லி மீட்டராகும். இதுவரை மட்டும் 124 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் மழை அதிகரிக்கக்கூடும். மாவட்டம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம்.