திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் தினமான நேற்று ஆலயத்தில் திருவூடல் உற்சவம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. நேற்று அதிகாலை நடை திறந்து பஞ்சமூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, உற்சவ மூர்த்தியான அண்ணாமலையாருக்கு அதிகாலை ஒரு மணிக்குத் தொடங்கிய மகா அபிஷேகம் விமரிசையாக நடந்தேறியது.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து, ஆலயத்தில் இருக்கும் அதிகார நந்தி உள்பட 6 நந்திகளுக்கு வித விதமான பழ வகைகள், பலகாரங்களைக் கொண்டு பிரமாண்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
பின்பு அண்ணாமலையார் கேடயத்தில் பட்டம் கீர்த்தி வாசன் சிவாச்சாரியாரும் ஸ்தானிகம் கந்தன் சிவாச்சாரியாரும் கேடயத்தில் அமர்ந்து கோவில் மிராசு விஜயகுமார் சாமிக்கு குடை போட ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.