திருவண்ணாமலை:தண்டராம்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட தரடாபட்டு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் வசித்து வருகிறார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்த இணையத்துல்லா என்பவர் கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார்.
இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது, ஊராட்சி நிதி சுமார் 25 லட்சம் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டு, காசோலையில் கையொப்பமிடும் உரிமையை இவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த தொகையை இவர் திருப்பி செலுத்தியுள்ளார்.
இந்த நிதி மோசடி தொடர்பாக இணையத்துல்லா தரப்புக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சையத் கவுஸ் தரப்புக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வந்தது. இந்த மோதலினால் இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் பள்ளிவாசல் மற்றும் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தொழுகை செய்ய ஒற்றுமை இன்றி பிரச்னையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது குறித்து திருவண்ணாமலை கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினர் உள்ளடங்கிய அமைதிக் கூட்டம் நடைபெற்றது. அந்த அமைதிக் கூட்டத்தில் ஒரு தரப்பினர் பள்ளிவாசலிலும், மற்றொரு தரப்பினர் ஈத்கா மைதானத்திலும் தொழுகை செய்ய கோட்டாட்சியர் அறிவுறுத்தி சமாதானம் செய்து வைத்தார். இந்நிலையில் இணையதுல்லா தரப்பினர், சையது கவுஸ் தரப்பினரை ஜமாத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.