விபூதி பிரசாத பாக்கெட்டில் அன்னை தெரசா பட சர்ச்சை திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாத பாக்கெட் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு நேற்று முன்தினம் வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கிய விபூதி பாக்கெட்டில் ஒரு பக்கத்தில் அண்ணாமலையார் படமும், மற்றொரு பக்கத்தில் அன்னை தெரசா படமும் இருந்துள்ளது.
மேலும், அந்த விபூதி பக்கெட்டில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவை இடம் பெற்றிருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையாக மாறியது. இதை பார்த்த திருவண்ணாமலை சேர்ந்த இந்து முன்னணியினர் கோயிலுக்கு சென்று முறையிட்டனர்.
அப்போது கோயில் அலுவலகத்தில் இணை ஆணையரிடம் அண்ணாமலையார் கோயிலில் பிரசாத பாக்கெட்டில் கிறிஸ்தவரான அன்னை தெரசா படம் போட்டிருப்பது முறையா? இது மதமாற்றத்திற்கான செயலா? இதை எப்படி அனுமதித்தீர்கள் எனக் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் இதை யார் செய்தது என கோயில் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது.
அதன் பிறகு கோயில் நிர்வாகம் சார்பில், இதை தாங்கள் செய்யவில்லை என்றும், சம்பந்தப்பட்ட ஒரு குருக்கள் மட்டும் செய்துள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக அவரை 6 மாதம் பணியிடை நீக்கம் செய்துள்ளோம் என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இனி இது போன்ற தவறு நடக்காது என்றும் கூறி அவர்களை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை.. ஈரோட்டில் களமிறங்கிய நவீன இயந்திரம்!