திருவண்ணாமலை அடுத்த கீழ்சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் விவசாயம் செய்துவருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும்; நிவேதா என்ற 6 வயது குழந்தையும் உள்ளனர். நேற்று(ஆகஸ்ட் 2) ஆடிப்பெருக்கை முன்னிட்டு, இறைச்சி எடுத்து சமைக்கக் கூறிவிட்டு, தோட்டத்திற்குச் சென்றுள்ளார், கலையரசன்.
வாழை இலை அறுத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிய கலையரசன், வீட்டின் பின்புறம் இருந்த கழிவறையில் மனைவி, மகள் ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் சென்று பார்த்த போது, கழுத்தறுபட்டு உயிரிழந்த நிலையில், நிவேதா இருந்துள்ளார்.
உயிருக்குப்போராடிய நிலையில் துடித்துக்கொண்டிருந்த மனைவி சுகன்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். இதன்பின்னர், மேல் சிகிச்சைக்காக சுகன்யா சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.