திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தை மற்றும் தாய் இறந்ததற்கு மருத்துவர்களே காரணம் என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருவண்ணாமலை:திருவண்ணாமலை அடுத்த சாவல் பூண்டியைச் சேர்ந்தவர், ஏழுமலை. இவரது மகள் ராஜலட்சுமி. இவருக்கும், ஆம்பூரைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மாதவன் ஆம்பூரில் உள்ள காலனி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், ராஜலட்சுமி தனது 2வது பிரசவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நேற்றைய முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று (ஜுன் 17) காலையில் ராஜலட்சுமிக்கு பிறந்த ஆண் குழந்தை, இறந்து பிறந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறி உள்ளனர்.
தொடர்ந்து, உயிரிழந்த நிலையில் எடுக்கப்பட்ட குழந்தை நேற்று மதியம் உறவினர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உறவினர்களும் உயிரிழந்த குழந்தையை அடக்கம் செய்து உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை ராஜலட்சுமியும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனைக் கேட்ட அவரது உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனையடுத்து இது குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் குணசேகரன், உறவினர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, தங்களுக்கு உரிய நியாயம் தருமாறு காவல் துறை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உயிரிழந்த ராஜலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இருக்கும் பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிரசவத்திற்காக வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், இந்த கவனக்குறைவு என்பது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்து உயிரிழந்த ராஜலட்சுமியின் உறவினர்கள் கூறுகையில், “முதலில் குழந்தை பிறந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். அதேநேரம், ராஜலட்சுமிக்கு கர்ப்பப்பையில் இருந்து அதிகம் ரத்தம் வருவதாகவும், எனவே ரத்தம் தேவைப்படும் என கூறிய அவர்கள், கர்ப்பப்பையை எடுப்பதற்கு மாதவனிடம் கையெழுத்தும் பெற்றனர். அடுத்த சிறிது நேரத்தில் ராஜலட்சுமி உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இதனிடையே, மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் எங்களிடம் பணமும் பெற்றுக் கொண்டனர்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பழங்குடி சிறுவனை காதலித்த சிறுமி ஆணவக்கொலை.. கர்நாடகாவில் நடந்தது என்ன?