திருவண்ணாமலை:தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை மக்கள் சிறப்பாகக் கொண்டாட ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரிசி பெறும் அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி, வெல்லம், ரவை, கோதுமை மாவு, பாசிப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் முழு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் விழா நேற்று (ஜனவரி.4) நடைபெற்றது.
திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு பொங்கல் பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1627 நியாய விலை கடைகள் மூலமாக 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 21 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க ஆணையிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையைக் கொண்டுவந்தது திராவிடம், போக்குவரத்து போன்றவற்றை தேசிய உடைமை ஆக்கியது திராவிடம், உலகிலேயே பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொண்டுவந்தது திராவிடம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்தது திராவிடம். ஆகவே தான் தற்பொழுது தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.