திருவண்ணாமலை: நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் எனும் திட்டம் திருவண்ணாமலையில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 17 ஆயிரத்து 963 மனுக்கள் பெறப்பட்டன.
தேர்தலில் வென்று முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், 100 நாள்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தினையும், தனி துறையையும் உருவாக்கினார்.
427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று (ஆக.6) 427 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 670 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரத்து 158 பயனாளிகளுக்கு, ரூ. 2 கோடியே 65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.