தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

'அறநிலையத்துறை கண்காணிப்பில் ஆலயங்களைக் காப்போம் என்பது தான் தற்போதைய ஆட்சியின் தாரக மந்திரம். தற்போதைய திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மிகத்தையும் பிரித்தே பார்க்க முடியாது, இரண்டும் ஒன்று தான் என்ற வகையில் தற்போதைய ஆட்சி நடைபெற்று வருகின்றது' என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 29, 2023, 9:06 PM IST

திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருக்கோயிலுக்கு நியமிக்கப்பட்ட அறங்காவலர்களுக்கு, அறங்காவலர்கள் நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு இன்று (ஜூன் 29) நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் பா.முருகேசன் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு நியமிக்கப்பட்ட அறங்காவலர்களுக்கு அறங்காவலர்கள் நியமன ஆணைகள் வழங்கி உரையாற்றிய பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த இரண்டாண்டு திராவிட மாடல் ஆட்சியில் தான் 788 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாகவும், கிராமக்கோயில்கள் திருப்பணிக்காக 1 லட்ச ரூபாயில் இருந்து இரண்டு லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கியது திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆண்டுக்கு 1250 கோயில்களுக்கு திருப்பணி செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது குடமுழுக்கு நடைபெற்று வருகின்றது. மேலும், கிராமப்புறங்களில் உள்ள 2500 ஆதி திராவிட கோயில்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

100 கோடி ரூபாய் மதிப்பில் வடலூரில் வள்ளலார் (ராமலிங்க சுவாமிகள்) மைய கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் உள்ள 13,580 கிராம புறக்கோயில்களில் 129 கோடி ரூபாய் அளவில் ஒரு வேளை பூஜைக்காக தற்போதைய திராவிட மாடல் அரசு வழங்கியுள்ளதாகவும், மேலும், திருக்கோயிலில் பணி புரியும் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நலவாரியம் அமைத்தும், பூசாரிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கியது திராவிட மாடல் ஆட்சிதான் என்றும் அறநிலையத்துறை கண்காணிப்பில் ஆலயங்களை காப்போம் என்பது தான் தற்போதைய ஆட்சியின் தாரக மந்திரம் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் உரையாற்றினார்.

மேலும், "அறங்காவலராக பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் பொது நோக்கோடும், சமூக நல்லிணக்கத்துடன் பணியாற்ற வேண்டும். திருக்கோயில்களில் உள்ள கடவுள்களுக்கு சாதி என்பது இல்லை. ஆகவே, அறங்காவலர்கள் சாதி அடிப்படையில் பணியாற்றக்கூடாது. அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களையும் சமமாகப் பார்க்க வேண்டும்.

தற்போதைய திராவிட மாடல் ஆட்சியையும், ஆன்மிகத்தையும் பிரித்தே பார்க்க முடியாது. இரண்டும் ஒன்று தான் என்ற வகையில் தற்போதைய ஆட்சி நடைபெற்று வருகின்றது" என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றினார். திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மிகத்தையும் பிரித்தே பார்க்க முடியாது என்ற அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவிலேயே முதல்முறையாக டிரோன் கண்காணிப்பு காவல் நிலையம் - அதுவும் சென்னையில்!

ABOUT THE AUTHOR

...view details